ஈரோடு இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று (jana. 17) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, "60 ஆண்டுகளாக விவசாயிகள் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் திமுக ஆட்சி தான். ஈரோடு மாநகராட்சியில் முறையாக பாதாள சாக்கடை இல்லை, நடைபாதைகள் இல்லை, மின் கட்டணம் போன்ற பிரச்னைகள் ஏராளமாக உள்ளது.
நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பேசாமல் பதாகைகள் வைத்து பிரசாரம் செய்தால் வழக்குப்பதிவு செய்கிறார்கள். பெரியார் சொல்லாததை சீமான் எதுவும் சொல்லவில்லை, இந்த மண்ணுக்கு தேவையான விஷயங்களை தான் சீமான் பேசி வருகிறார். எனவே சீமான் பேசியது சரி தான்" என்று தெரிவித்துள்ளார்.