சாதி மத பேதமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் தமிழர் பாரம்பரிய முறைப்படி சிலம்ப பொங்கல் வைத்து பொதுமக்கள் கொண்டாடினர். இதில், அப்பகுதி மீனவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் நாட்டு தூதர் மசாயுகி கலந்து கொண்டு, பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடினார். தொடர்ந்து ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின.