அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்?... கூட்டணி குறித்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ரெயில்வே சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சென்னை நட்சத்திர விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்தும், அதேபோல அதிமுக பாஜக கூட்டணி என்ற அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள், பாஜக மாநில தலைவர் பதவியில் அண்ணாமலையை மாற்றுமாறு வலியுறுத்தியதாக பேசப்பட்டது. இதனால் அண்ணாமலைக்கு பதிலாக, அதிமுக பாஜக கூட்டணிக்கு வசதியாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.