அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை!
அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.