For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

05:18 PM Jul 30, 2024 IST | Web Editor
“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது”   உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
Advertisement

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

ஆன்லைன் கட்டணத்திற்கு கூடுதலாக கேளிக்கை வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக ஏஜிஎஸ், எஸ்பிஐ உள்ளிட்ட திரையரங்குகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு, கூடுதல் கட்டணத்தை கேளிக்கை வாரியாக ஏற்க முடியாது என உத்தரவிட்டு அந்த வழக்கை ரத்து செய்தது.

இதனிடையே, கேளிக்கை வரி சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் சேவைகள் வரிக்குட்பட்டவை எனவும், எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வணிக வரி அலுவலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகரத்னா ஆன்லைன் டிக்கெட்டை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் எந்த நோக்கத்திற்காக கூடுதலாக ரூ.30 செலுத்துகிறார்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு வணிக வரி பிரிவு தரப்பில், “பொதுமக்கள் தங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு டிக்கெட்டைப் பெறுகிறார்கள். எனவே திரைப்பட டிக்கெட்டுக்கான ரூ.120 தவிர கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி நாகரத்னா, “நேரடியாக திரையரங்கிற்கு செல்வதற்கு பதிலாக, வீட்டிலிருந்து வாங்குவதால், உங்கள் சேவைக்காக நீங்கள் எடுக்கும் கட்டணம் இது என்றால் அது எப்படி கேளிக்கை வரியின் கீழ் வரும்? ஆன்லைன் மூலம் எளிதாக டிக்கெட் பெற்றால், அது கேளிக்கை வரியின் கீழ் வருமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிபதி கோட்டீஸ்வர் சிங், “கூடுதல் கட்டணம் பொழுதுபோக்கிற்காக அல்ல. ஆனால் சினிமா தியேட்டர்கள் வரை பயணிக்காமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் மக்களின் வசதிக்காக உள்ளது. பெட்ரோல்/டீசல் சேமிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் போன்றவை இதில் அடங்கும். இது ஒருவர் பயன்படுத்தும் வசதிக்கான கட்டணம். அது எப்படி கேளிக்கை வரியின் கீழ் இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

Tags :
Advertisement