கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!
கோரமண்டல் உர ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் அறவழியில் போராட்டத்திற்கு வியாபாரிகள், பொதுநல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம், தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையும் படியுங்கள் : கிட்டிப்புள் விளையாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் - வீடியோ இணையத்தில் வைரல்..!
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, சுமார் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியும், ஒரு வார காலம் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்த தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, எண்ணூர் கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து கடந்த 40 நாட்களாக அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று எண்ணூர் அனைத்து வியாபாரிகளும் பொதுநல சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் உள்ள, கத்திவாக்கம், தாழங் குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்தவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை முழுமையாக தங்களது கடைகளை அடைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.