எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் - சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!
எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பைப் லைனில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில், கோரமண்டல் நிறுவன தொழிற்சாலையில் இருந்து கடலுக்கு செல்லும் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பே அம்மோனியா வாயு கசிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. தகவலறிந்ததும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடைப்பை சரிசெய்யும் பணியை விரைந்து மேற்கொண்டதாகவும், அதன் பயனாக 20 நிமிடங்களில் வாயுக்கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயுக்கசிவால் மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எண்ணூரின் சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதியில் மிதமான அளவில் வாயு கசிவு ஏற்பட்டது என்றும், 400 மைக்ரோகிராம் கியூபிக் மீட்டர் அளவில் இருக்க வேண்டிய அமோனியா 2090 மைக்ரோகிராம் கியூபிக் மீட்டர் என்ற அளவுக்கு அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது - பின்னணி என்ன?
இதற்கிடையே அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தின் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு, ஆய்வு அறிக்கைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.