முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து அணி!
இந்தியா- இங்கிலாந்துக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 218 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஸாக் க்ராவ்லே – பென் டக்கெட் இணை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 27 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஆலி போப் 11 ரன்னும், ஜோ ரூட் 26 ரன்னும், ஜானி பேர்ஸ்டோ 29 ரன்னும் எடுத்தனர். பென் ஃபோக்ஸ் 24 ரன்னில் வெளியேறினார். ஸாக் க்ராவ்லே 108 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
57.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.