சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு... இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவிப்பு...
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார்.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும், சிறு வயதில் இருந்தே இங்கிலாந்து அணிக்கு விளையாட வேண்டும் எனும் தனது கனவு நிறைவேறியதாகவும் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக டேவிட் வில்லி இதுவரை 70 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 94 மற்றும் 51 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.
ஒரு போட்டிகளில் 93.3 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் டி20 போட்டிகளில் 130.63 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார் டேவிட் வில்லி. அவரது இந்த ஓய்வு அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.