#Education - பொறியியல் துணை கலந்தாய்வு நிறைவு! 8,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான 3 சுற்று கலந்தாய்வில் 1,25,031 இடங்கள் நிரம்பின. மீதம் 70,403 இடங்கள் காலியாக இருந்தன. இந்தக் காலியிடங்களை பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் இதற்காக துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துணை கலந்தாய்வு செப்.6-ஆம் தேதி இணையவழியில் தொடங்கிய நிலையில் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தோருக்கான பிரிவில் 8,486 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 178 பேருக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 160 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 19 பேருக்கும் இடங்களை உறுதி செய்வதற்கான தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து எஸ்சிஏ(அருந்ததியர்) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொது மற்றும் துணைக் கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்று கல்லூரிகளில் சேர்ந்த எஸ்சி பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம். அந்த மாணவர்கள் ww.tneaonline.org என்ற வலைத்தளம் வழியாக தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்யவேண்டும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கிடையே, நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 30,538 இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 48 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.