பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் முடிவு!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முடிவடையவுள்ள நிலையில், இதுவரை 2,42,983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது. ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியானது.
இதனையடுத்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. அதன்படி, இன்று (ஜூன் 5) மாலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக 2,42,983 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 1,96,570 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திவிட்டனர். அவர்களில் 1,69,068 மாணவர்கள் தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூன் 6) கடைசி நாள். அதன் பின்னர் வரும் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, ஜூலை 12ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.