எம்புரான் படத் தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.1.5 கோடி அமலாக்கத்துறையினரால் பறிமுதல்!
பிரித்விராஜ் இயக்கம் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் L2 எம்புரான். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் படத்தின் மீது பல்வேறு விமசனங்கள் எழுந்தது. ஒருபுறம் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக வலதுசாரி அமைப்புகளும், மறுபுறம் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளும் குற்றம் சாட்டி வந்தனர். படத்திற்கு வந்த விமர்சனங்களையடுத்து சர்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை எட்டியபோது சுரேஷ் கோபி எம்.பி. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அதே போல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இவ்விவகாரம் எதிரொலித்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சூழலில் அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் ரூ.1.5 கோடி பணத்தை அவரிடமிருந்து அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளின் கீழ், கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு இடத்திலும், தமிழ்நாட்டின் சென்னையில் 2 இடங்களிலும் திருமதி ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட்டின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் 04.04.2025 மற்றும் 05.04.2025 ஆகிய தேதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளில், 1999 ஆம் ஆண்டு FEMA ஐ மீறியதற்காக ரூ. 1.50 கோடி ரொக்கம் மற்றும் குற்றவியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மிஸ் ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட் அதிகாரியின் உரிய அனுமதியின்றி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து ரூ. 371.80 கோடி பணத்தை ரொக்கமாகவும் ரூ. 220.74 கோடி காசோலையாகவும் அவரது நிறுவனம் வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பலருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இது, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல் ” என்று குறிப்பிடப்பட்டதோடு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எம்புரான் படத்தின் இயக்குநர் பிருத்விராஜுக்கு இன்று(ஏப்ரல்.05) வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.