சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் அதன் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், "டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ30 அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும், ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததுள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சட்டவிரோதமாக சோதனை நடத்தியதாக டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் நிறுவன மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.