சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தியாகராய நகர், அசோக் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள தொழிலதிபர் குணசேகரன் என்பவரது அலுவலகம் மற்றும் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தனியார் நிறுவனங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பல திசைகளில் தொழிலதிபர்கள் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். முழுமையான சோதனைக்கு பிறகு எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது?, என்ன மாதிரி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.