சென்னையில் தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுனங்களில்
அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அவரிடம் டெல்லியில் இருந்து வந்த அமலாக்குத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நான்கு வாகனங்களில் திடீரென சோதனைகளுக்கு கிளம்பினர்.
மணல் குவாரி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் வட சென்னையில் என்.எஸ்.சி போஸ் சாலை, சௌகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லர்ஸ் என்ற கடையில் சோதனை செய்தனர்.மேலும் யானைகவுனி வீரப்பன் தெருவில் உள்ள டிபி ஜூவல்லர்ஸ் மற்றும் Csv investments pvt ltd, ஜேகே ஜுவல்லரி நகைகடை, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வெங்கடேஷ்வரா ஜூவல்லரி மற்றும் பதிக் சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக இவ்வகை தங்க நகை கடைகளில் தங்கம் வாங்குவது மற்றும் விற்பனை
செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் உள்ளதாக ஏற்பட்ட
சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டனர். முறையாக மத்திய அரசின் அனுமதியுடன் தங்கத்தை இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா, தங்க இருப்பு மற்றும் தங்கம் எவ்வளவு
பயன்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விவகாரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை இரண்டு நாள் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் அதிகாரப்பூர்வமாக பறிமுதல்கள்
குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் என்.எஸ்.சி போஸ் சாலையில் இதே போன்றதொரு தங்க நகை கடையில் ஒன்றரை கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.