வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில்
2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அவரிடம் டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதை அடுத்து, தங்க நகைகள் மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லர்ஸ், யானைகவுனி வீரப்பன் தெருவில் உள்ள டிபி ஜூவல்லர்ஸ் மற்றும் Csv investments pvt ltd, ஜேகே ஜுவல்லரி நகைக் கடை, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வெங்கடேஷ்வரா ஜூவல்லரி மற்றும் பதிக் சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் இந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் முடிவில் அதிகாரப்பூர்வமாக பறிமுதல்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் என்.எஸ்.சி போஸ் சாலையில் இதே போன்றதொரு தங்க நகை கடையில் ஒன்றரை கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.