இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும் - ரஷ்யா துணை பிரதமர் நம்பிக்கை..!
கடந்த 2022 முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தினார். மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை சுட்டிகாட்டி இந்தியா பொருட்களுக்கான வரியை உயர்த்தினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது பற்றி பேசியுள்ள ரஷ்யா துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்,
“எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருந்து வருகிறோம். ரஷ்யாவிடம் இருக்கும் எரிசக்தி வளத்திற்கு சந்தையில் தேவை இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நமது கூட்டாளிகள் எரிசக்தி வர்த்தகத்தை தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவிடம் நட்புறவில் இருக்கும் நாடுகளுக்கு யாரும் ஆணைகளை பிறப்பிக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்”
என்று தெரிவித்தார்.