"அல்ப ஆயுசு"-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த முறை இருப்பதாகக் கூறி நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் இல்லை....
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் அரசியல் கட்சிகளுக்கு வழங்கக் கூடிய நன்கொடையே தேர்தல் பத்திரம் என அழைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நிதி தேவைக்காக தேர்தல் பத்திரங்கள் 2017-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தல் பத்திரங்கள் எங்கு கிடைக்கும்?
தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளால் நேரடியாக வெளியிட முடியாது. பத்திரம் என்று வருவதால் இதனை அரசு வெளியிடுமா? என்றாலும் இல்லை. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே இந்த தேர்தல் பத்திரத்தை வெளியிட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்களும் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
பத்திரத்தின் மதிப்பு என்ன?
தேர்தல் பத்திரங்கள் ₹1,000, ₹10,000, ₹1 லட்சம், ₹10 லட்சம் மற்றும் ₹1 கோடி என பல மடங்குகளில் கிடைத்தன. இந்த திட்டத்தின்கீழ் பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரி விலக்கு உண்டு,
அதே நேரத்தில் யார் நன்கொடை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை.
நன்கொடைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன?
ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்பும், தனி நபர்கள் அல்லது பெரு நிறுவனங்கள் எஸ்பிஐ வங்கியை அணுகி தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். பின்பு அதனை அந்த அரசியல் கட்சி, அதனை வங்கிகளில் செலுத்தி பணமாக்கிக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நன்கொடைகளை பணமாக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கக் கூடிய நன்கொடைகளுக்கு வரம்பு கிடையாது. ஆனால், தேர்தல் பத்திரங்களை பெற்ற அரசியல் கட்சிகள் அதனை வங்கிகளில் செலுத்தி 15 நாட்களுக்குள் பணமாக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அந்த பணம் பிரதமரின் நிவாரண நிதிக்கு சென்றுவிடும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் நிதி பெறலாம்?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29A-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை பெற முடியும். அதே நேரம், கடந்த முறை மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
தேர்தல் பத்திரங்கள் முறை முதன்முறையாக 2017-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால், பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நிதிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்தி பண மசோதாக்கள் மூலம் அரசியல் நிதி ஆதாரமாக ஜனவரி 2018 இல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நிறுவனங்கள் சட்டம், வருமான வரி சட்டம் மற்றும்
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஆகியவற்றில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.
பாஜக அரசின் தேர்தல் பத்திர முறைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. "புதிய இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன்
தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகிறது" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ராகுல்காந்தியின் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் பத்திர முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்தின் சட்டபூர்வதன்மை மற்றும் அது நாட்டுக்கு ஏற்படுத்தக்கூடிய
அச்சுறுத்தல் உள்ளிட்ட பல வாதங்கள் மனுதாரர்களால் முன்வைக்கப்பட்டன.
தேர்தல் பத்திர திட்டம் தகவல் அறியும் உரிமையை மீறுகிறது, அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற மோசடியான நிறுவனங்களுக்கு எளிதாக கதவுகளைத் திறந்து விடுகிறது , ஊழலை ஊக்குவிக்கிறது போன்றவை மனுதாரர்களின் வாதங்களில் முக்கியமானது.
மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், ஒரு அரசியல் கட்சி நன்கொடைகளை தேர்தலுக்கு மட்டுமல்லாமல் வேறு எதற்காகவும் பயன்படுத்தலாம் என்ற வாதத்தை ஆணித்தரமாக முன் வைத்தார். எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை விலைக்கு வாங்கவும் இந்த தொகையை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.
ஆனால், தேர்தல் பத்திர முறை "வெளிப்படைத்தன்மையை" உறுதி செய்வதாகவும், கறுப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க உதவும் என்றும் மத்திய அரசு எடுத்துக் கூறியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திர முறை அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஒரு மனதாக தீர்ப்பளித்த நீதிபதிகள் அதனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
- தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1)(a)வை மீறும் வகையில் உள்ளது
- கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல; வேறு மாற்று வழிகளும் உள்ளன.
- பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கிவிட்டு, அதற்கு கைம்மாறு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.
- தற்போதைய விதிமுறைகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்ட விரோதமாக உள்ளது
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு புறம்பானது
- வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
- மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும்.
- மார்ச் 13-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுவரை கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?
தேர்தல் பத்திரங்கள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், அரசியல் கட்சிகளுக்கு சுமார் ரூ.17,000 கோடி என்ற தகவலை வெளியிட்டுள்ளது ஏடிஆர் என அழைக்கப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு. இதில் பாஜக பெற்றது 57%, காங்கிரஸ் பெற்றது 10% என்ற அதிர்ச்சித் தகவலையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அல்ப ஆயுசில் முடிந்த தேர்தல் பத்திர முறை
மக்களவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு அளித்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளும் பாஜகவுக்கு பாதகமாக அமைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு பாஜகவுக்கு விழுந்த மிகப்பெரிய அடி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
#ElectoralBonds அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும் என்றும் இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கான # ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது என்றும் நீதித்துறை மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல், தேர்தல் பத்திர முறை ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் பத்திரங்கள் மூலம் எங்களை போன்ற கட்சிகளை ஒடுக்குகிறார்கள். பாஜக மட்டும் தான் தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றுள்ளதா? திமுகவும் தான் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது" என்று கூறினார்.
எது எப்படியோ.... 2018-ம் ஆண்டு ஜனவரில் பிறந்த தேர்தல் பத்திர முறை, 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்தில் தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.