திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!
திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (30) என்கிற கொம்பன் ஜெகன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கலந்து கொண்ட அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சனமங்கலம் என்கிற இடத்தில் ரவுடி ஜெகன் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான குழுவினர் ஜெகனை பிடிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் வினோத்தை அரிவாளால் தாக்கி விட்டு ஜெகன் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் உதவி ஆய்வாளர் வினோத்தின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி கொம்பன் என்கிற ஜெகனின் மார்பிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார்.