காஞ்சிபுரத்தில் என்கவுன்ட்டர்! கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!
காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 26-ந் தேதி ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் பல்லவ மேடு மேற்கு பகுதியைச் சேர்ந்த ரகு என்ற ரகுவரன், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அசேன் என்ற கருப்பு அசேன் ஆகியோரை சிவ காஞ்சி போலீசார் தேடி வந்தனர்.
இன்று அதிகாலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய மேம்பாலம் அருகில் 2 பேரும் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பிடிப்பதற்காக விஷ்ணு காஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோர் சென்றனர்.
அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமாரை ரவுடிகள் ரகு, அசேன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கை, காலில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் சுதாகரை வெட்ட முயன்ற போது அவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் இரண்டு ரவுண்டு சுட்டதாக தெரிகிறது. இதில் ரகு, அசேன் ஆகிய இருவருக்கும் மார்பில் குண்டு பாய்ந்தது. அவர்களை உடனடியாக போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதற்கிடையில் போகும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர். வெட்டு காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்கவுன்ட்டர் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேரிடையாக விசாரணை நடத்தி வருகிறார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி ரகு மீது ஒரு கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும், அசேன் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.