பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்ல லஞ்சம் வாங்கிய ஊழியர் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை குஞ்சாலு விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் இன்பராஜ். இவர் ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி. இவரது மனைவி பிரேமாவதி. இவர்கள் இருவரும் நேற்று காலை தங்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். குஞ்சாலுவிளை பகுதியில் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற தனியார் கல்லூரி பேருந்து வலது புறமாக திரும்பி சென்றது.
இதையும் படியுங்கள் : ‘ஜன நாயகன்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான தகவல்!
இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த செல்வின் இன்பராஜ் தனது இருசக்கர வாகனத்தை இடதுபக்கமாக திருப்பி சாலையோரம் சென்றார். அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரேமாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேமாவதி உடலை மீட்டு குளத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்த பிரேமாவதியின் உடலை பிணவரையில் கொண்டு வைக்க வேண்டும் எனில் ரூ.1500 ரூபாய் தர வேண்டும் என மருத்துவமனை ஊழியர் ஒருவர் இன்பராஜிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்பராஜ் வேறு வழி இல்லாமல் தனது உறவினரின் ஜிபே மூலம் ஊழியருக்கு ரூ.1500 ரூபாய் அனுப்பினார். அந்த ஊழியர் பணம் வந்ததை உறுதி செய்த பின்னரே பிரேமாவதியின் உடலை பிணவறைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.