”வார்த்தை அல்ல உணர்ச்சி” - பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயரிட்ட பெற்றோர்கள்!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது.
சிந்தூர் என்ற பெயருக்கு 'திலகம்' எனப் பொருள். இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர். பஹல்காம் தாக்குதலில் பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டிபோடுவதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளனர். இது தொடர்பாக தனது பெண் குழந்தைக்கு சிந்தூர் என பெயரிட்ட அர்ச்சனா ஷாஹி என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பஹல்காம் தாக்குதலில் திருமணமான பல பெண்கள் தங்கள் கணவர்களை இழந்தபோது அவர்களின் வாழ்க்கை சீரழிந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடத்தியது. இதைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். இப்போது, சிந்தூர் என்பது ஒரு வார்த்தை அல்ல, ஒரு உணர்ச்சி. அதனால் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்தேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.