தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கும் ‘எலான் மஸ்க்’!
இன்னும் சில மாதங்களில் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை இழந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளுக்கு தனது எக்ஸ் தளத்தை மட்டுமே உபயோகிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளுக்கு பயன்படுத்தவிருக்கிறேன்' என அவர் கூறியிருக்கிறார்.
அவர் யூத வெறுப்புக் கருத்தைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விளம்பரங்களை நிறுத்திக்கொண்டன. இதனால் இந்த நிறுவனம் கடும் நிதியிழப்புகளைச் சந்தித்தது. 'எக்ஸ் தளம் முடங்கினால், அதற்குக் காரணம் விளம்பரங்களை நிறுத்திக்கொண்ட நிறுவனங்கள்தான்' என எலான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.