டொனால்டு ட்ரம்பை நேர்காணல் செய்த எலான் மஸ்க் - நேரலையில் 13லட்சம் பேர் பங்கேற்பு!
ஸ்பேசஸில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்பை எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். இதில் 13லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின ர்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரபல உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது.
இந்த நேர்காணலை உலகம் முழுவதிலும் இருந்து நேரலையில் சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற இருந்த நேர்காணல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் வரை தாமதமாக துவங்கியது. இந்த நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியை கடுமையாக சாடினார்.
இந்த நேர்காணலில் தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் “ துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது என் காதை பலமாக தாக்கியதும் அது தோட்டாதான என எனக்கு தெரிந்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதை தெரிவிக்கவே, உடனடியாக எழுந்து நின்றேன். அவர்கள் அதற்கு ஆரவாரம் செய்தனர். கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். என்மீது தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்ய துவங்குங்கள்"என டொனால்ட் ட்ரம்ப் பேசினார்