கோயில் திருவிழாவில் பக்தரை தூக்கி, சுழற்றி வீசிய யானை - 13 பேர் காயம்!
கேரளாவில் கோயில் திருவிழா ஒன்றில் யானை, பக்தர் ஒருவரை தூக்கி சுழற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் பெரும்பாலும் கோயில் திருவிழாக்களுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்போது அதிக கூட்டத்தை பார்க்கும் யானைகள் மிரண்டு, திடீரென ஆக்ரோசமடைந்து மனிதர்களை தாக்குவது, யானைகளுக்குள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வது என்பது சமீப காலமாக தொடர்கதையாகி வருகிறது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் கோயில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட யானை ஒன்று கூட்டத்தை பார்த்து மிரண்டு, பக்தர் ஒருவரை தூக்கி வீசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே திரூர் புதியங்காடி பகுதியில் உள்ள பள்ளி வாசலில் சிறப்பு வாய்ந்த நேர்ச்சை பெருவிழா நடைபெறுகிறது.
சாதி, மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக கொண்டாடும் இந்த பெருவிழாவில் நேற்று இரவு யானைகள் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஒரு யானை மிரண்டு, ஒருவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடியதில் 13 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோட்டக்கல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மற்ற யானைகளை பாகன்கள் அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.