#ElectricityBill | 15 ஆண்டுகளாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்! ஏன் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சுமார் 15 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன். பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியின் வாடிக்கையாளரான கென் வில்சன் தனது வீட்டின் மின்கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். இதனால் தனது வீட்டின் மின்கட்டணத்தை குறைக்க பல நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவரின் முயற்சிகள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. மின்கட்டணம் அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால், சந்தேகமடைந்த அவர், இதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்தார்.
இதனால், வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார். அவர் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் இயங்காமல் இருக்கும்போதும், மின்சார மீட்டர் தொடர்ந்து இயங்குவதைக் கண்டுபிடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு இதுகுறித்து விவரித்தார். மேலும், இதனை ஆய்வு செய்ய ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அந்நிறுவனம் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது. அதாவது அவரது வீட்டின் மின் கட்டணத்திற்கு பதிலாக வேறொருவரின் மின்கட்டணம் வசூலிப்பட்டு வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக இவ்வாறு நடந்துள்ளதாக பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி தெரிவித்தது. மேலும், அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கோரியது.