தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மின்சார சேவை முழுமையாக சீரமைப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தகவல்!
வரலாறு காணாத மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்சார சேவை சீரமைக்க்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கு நீர், உணவு கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி சிறிது சிறிதாகவே சீரான நிலைக்கு திரும்பியது. மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சார்பாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் புன்னக்காயல் கிராமத்திற்கு மீண்டும் மின்சார வசதி செய்து தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு அந்த பகுதிகளில் மின்சார வசதி செய்து தரப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வரலாறு காணாத மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்சாரத்தை சீரமைத்து விட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.