மின்வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்!
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலயில் இவர் வசித்த வீட்டில் கடந்த சில நாட்களாக மின்கசிவு இருந்ததால் மின்வாரியத்திற்கு புகார் அளித்துள்ளார்.
ஆனால் மின்வாரிய ஊழியர்கள் மின்கசிவை சரி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் ஸ்விட்ச் போர்டில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியதில் தினேஷ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்வாரிய துறையினர் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு நேரிட்டு இருக்காது என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மின்சார துறையை கண்டித்தும், உயிரிழந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி தினேஷின் உறவினர்கள் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை அருகில் மயிலாடுதுறை, கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.