உத்தரவை மதிக்காத மகாராஷ்டிரா அரசு - அதிருப்தியில் #ElectionCommission!
அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான உத்தரவை அமல்படுத்த தவறியதற்காக, மகாராஷ்டிராவின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக 3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாநிலங்களில் பணியாற்றியவர்கள், அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தங்களது இந்த உத்தரவை மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநில அரசு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரை மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டித்திருக்கிறது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
“தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மாநில அரசு மதிக்காமல் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைகளை பாதிக்கக் கூடிய வகையில் மகாராஷ்டிரா அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய செயல்பாடு அற்ற தன்மையை ஏற்க முடியாது” எனவும் கூறியுள்ளது.