சூடுபிடிக்கும் தேர்தல் களம் - நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பௌர்ணமி என்பதால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மனை வணங்கிய பின்னரே தேர்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வம் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
இதையும் படியுங்கள் : “எனக்கு அரசியல் புதிதல்ல..” – விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா பேட்டி!
பூஜைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நாளை மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.