தேர்தல் திருவிழா 2024 - வெல்லப் போவது யார்? பிரச்சாரமா? தொழில்நுட்பமா?
2024 பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொடர்.....
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. 140 கோடிக்கு மேல் மக்களை கொண்ட இந்தியாவில் தற்போது வரை 96.88 கோடி வாக்காளர்களாக தேர்வாகியுள்ளனர். கோடிக்கணக்கான வாக்காளர்கள், லட்சக்கணக்கான வேட்பாளர்கள், ஆயிரக்கணக்கான சின்னங்கள் என ஜனநாயகத் திருவிழாவாக தேர்தல் நடைபெற்றாலும் அவற்றில் மிக முக்கியமான ஒன்று பிரச்சாரம் தான்.
தேர்தல் ஜனநாயகத்தின் பாகம் என்றால் அதற்கு உயிர் கொடுக்கக் கூடியது தேர்தல் பிரச்சாரங்கள்தான். தங்களிடம் உள்ள அரசியல் கொள்கைகள், தாங்கள் முன்னிறுத்தும் மக்கள் நல திட்டங்கள், தங்களது எதிர்கால பார்வைகள் என அனைத்தையும் மக்களிடம் வெளிப்படுத்தி அதன் மூலம் தங்களுக்கான பலத்தை பெற்றுக்கொள்ள தேர்தல் பிரச்சாரம் முக்கிய கருவியாக அமைகிறது.
அமெரிக்காவில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அங்கே பிரதான இரண்டு கட்சிகள் ஊடகங்கள் முன்னிலையில் தங்களது அரசியல் கொள்கை, தேர்தல் வாக்குறுதிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள். இது தவிர பேரணி , பொதுக் கூட்டம், விளம்பரங்கள் என பிரச்சாரம் நடைபெறும். இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் சற்று வித்தியாசமானவை. வீட்டுக் வீடு சென்று பிரச்சாரம், பொதுக் கூட்டம், மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம், பேரணிகள், விளம்பரங்கள் என பிரச்சாரங்கள் அமைவதுண்டு.
தொழில்நுட்பத்தின் உச்சகட்ட புரட்சியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாக தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. என்ன தான் தெளிவான, தொலைநோக்கு திட்டங்கள் தங்களிடம் இருந்தாலும் அதனை மக்களிடம் அல்லது வாக்கு செலுத்தும் வாக்காளர்களிடம் சரியான வகையில் கொண்டு செல்பவர்களே இங்கு வெற்றியாளர்கள். நாளிதழ்கள் உருவாகி 100 வருடங்களை கடந்து விட்டோம். ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்றளவும் மிகப்பெரிய பங்கை அவை ஆற்றுகிறது. அதன் பின்னர் வந்த வானொலி, தொலைக்காட்சி, கணிணி என அடுத்தடுத்து வந்த எல்லா தொழில்நுட்பங்களும் பிரச்சாரங்களுக்கு மிக முக்கியமான கருவியாக அமைந்தன.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது சமூக வளைதங்களும், செயற்கை நுண்ணறிவும், BOT தொழில்நுட்பமும் மிகப்பெரிய மாற்றங்களை தேர்தல்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களின் சமீப பிரச்னைகளில் இருந்து கடந்த கால ரகசியங்கள், தனிப்பட்ட அந்தரங்கங்கள் வரை ஒருவரை கொண்டாட வைப்பதும், கீழே தள்ளி வீட்டிற்கு அனுப்புவதையும் முடிவு செய்யும் இடத்தில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
- அகமது AQ