சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதலமைச்சர் ஆனார்.
இதையும் படியுங்கள் ; “பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த மனுக்களை நேற்று (பிப்.06 ) விசாரித்த தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அந்த அறிவிப்பில், அஜித்பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஷரத்ராவ் பவார் மற்றும் என்சிபி-சரத் பவார் ஆகிய 3 பெயர்கள் சரத் பவார் தரப்பில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என்ற பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரத் பவார் தரப்புக்கு புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.