தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் தேசிய தலைவர்கள், மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் தங்களது கட்சி சார்பிலும், கூட்டணி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். கட்சிகள் அனுமதி கேட்கும் விளம்பரம் தொடர்பான விண்ணப்பங்களை, 2 நாட்களில் பரீசிலித்து தேர்தல் ஆணையம் அனுமதி தர வேண்டும்.
ஆனால் திமுக அளிக்கும் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை கால தாமதம் செய்து வருவதாகவும், நிராகரித்தும் வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவை - 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடக்கம்!
அதில், தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி கோரி திமுக அளித்த விண்ணப்பங்கள் மீது அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி முன் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.