தேர்தல் பத்திர விவகாரம் - சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அரசியல் சாசன பிரிவு 32-ன் கீழ் உத்தரவிடுவது அவசரப்படுவதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுநல வழக்குகளுக்கான மையம் உள்பட பல தரப்பினர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று (ஆக.2) தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "மனுதாரர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக நிவாரணம் பெற குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் நிவாரணம் பெற முயல வேண்டும். அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் மட்டுமே, அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் நிவாரணம் கோருவது சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாத நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிப்பது அவசரப்படுவதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும்" என தெரிவித்துள்ளது.
முன்னதாக மனுதாரர்கள் தரப்பில், "தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மூலம் பலன் பெறும் நோக்கில் செல்வாக்கு மிக்க தனிநபர்களும், நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்குகின்றன. இதன்மூலம், லாபகரமான ஒப்பந்தங்கள், கொள்கை மாற்றங்கள், பணப்பலன்கள் ஆகியவற்றை இவர்கள் பெறுகிறார்கள். சட்ட அமலாக்க நிறுவனங்களில் உள்ள சில அதிகாரிகளே இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதால் சாதாரண விசாரணையால் இதில் உண்மையைக் கண்டறிய முடியாது" என வாதிடப்பட்டது.
"நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்று வந்துள்ளன. இதை மனுதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் மனுதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். மேலும் அவர், மனுதாரர்கள் சட்டப்பிரிவு 226-ன் கீழ் உயர் நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் அவர் கூறினார்.