Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் பத்திர விவகாரம் - பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

09:49 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.

Advertisement

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மார்ச் 14ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், எஸ்பிஐ வங்கி வழங்கிய விவரங்களை வெளியிட்டது. இதில் நிறுவனங்கள் வாங்கிய நன்கொடை பத்திரங்களும், கட்சிகள் நன்கொடை பத்திரங்களை பணமாக மாற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளான, ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) என்ற நிறுவனம் அதிகபட்சமாக தனது இரு நிறுவனங்களின் பெயரில் ரூ.1,350 கோடி மதிப்புடைய தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த மெகா என்ஜினீயரிங் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேலும் மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் நிறுவனம் ரூ.410 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, சுனில் மிட்டலின் மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.246 கோடி, லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் ரூ.35 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன.

ஆனால், இப்படி வாங்கிய நிறுவனங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தன? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதனை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விசாரணையில், எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்களின் எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கடந்த 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடும். இதன் மூலம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் யார் யாரிடமிருந்து எவ்வளவு நிதி வாங்கியுள்ளன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகி பெரும் விவாதங்களை கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ECIELECTION COMMISSION OF INDIAElectoral Bondsnews7 tamilNews7 Tamil UpdatessbiSupreme Court of india
Advertisement
Next Article