தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ - பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!
ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜெ.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11-ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்று (மார்ச் 14) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 2019 ஏப்ரல் முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘ஒரு நன்கொடை. ஒரு கட்சி’ என தலைப்பிடப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையம், வெளியிட்ட தேர்தல் பத்திரங்களின் தரவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மட்டும் பாஜக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெற்ற தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.