தேர்தல் பத்திர விவகாரம் | SBI வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத எஸ்.பி.ஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் (electoral bonds) நடைமுறை இந்திய அரசியலைமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்தது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019 ஏப்ரல் 12 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை 2024 மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கூறிய தேதி வரையில் தேர்தல் பத்திரங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்காத எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
அந்தக் கோரிக்கை மனுவில் “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புகிறோம். இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
தேர்தல் பத்திரங்களின் விவரங்களைத் தொகுத்து வெளியிடுவது என்பது ‘அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணி’ என்பதால் கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறது. எஸ்.பி.ஐ வங்கியின் இந்த கோரிக்கை அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், அரசியல்வாதிகளும், இன்னும் பலரும் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த கோரிக்கையை ‘தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்கும் முயற்சி’ என்று சாடியுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத எஸ்.பி.ஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கின் மூல மனுதாரரான ADR சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில், வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் தங்களிடம் உள்ளது என வங்கி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, போதிய தரவுகள் இல்லை எனக் கூறி கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயல் ஆகும். எனவே எஸ்.பி.ஐ வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மனுவில் மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.