'எடுத்தேன் பாரு ஓட்டம்'... வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் - மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!
கோவை மாநகர் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2.15 மணியளவில் ராமசாமியின் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டே இருந்ததால், இந்த சத்தம் எங்கிருந்து கேட்கிறது என்பதை பார்ப்பதற்காக ராமசாமி அவரின் வீட்டின் கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்க எவ்வளவு முயன்றும் ராமசாமியால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அவர் வீட்டில் உள்ள மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் வெளியே இருந்து காம்பவுண்ட் சுவர் ஏரி குறித்து தப்பிச் சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, வீட்டில் இருந்த மற்றவர்களை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு எழுந்த ராமசாமியின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது கதவின் முன்பு உளி, ஸ்க்ரூ டிரைவர், பல் துளக்கும் பிரஸ் போன்றவை கிடந்தன. மேலும், அந்த நபர் கதவை திறப்பதற்கு முயற்சி செய்த தடயங்களும் அந்த இருந்துள்ளன.
இதனை பார்த்த ராமசாமியின் குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை பார்க்க முடிவு செய்தனர். ஆனால், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, அவர்கள் உடனடியாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த மற்ற சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் சூட்கேஸ் உடன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாவி குதித்து உள்ளே வந்தது தெரிய வந்தது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.