For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘கல்விக் கொடையாளர்’ ஆயி அம்மாள், பள்ளி மாணவன் டேனியலுக்கு விருது - குடியரசு தின விழாவில் கெளரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

01:37 PM Jan 26, 2024 IST | Web Editor
‘கல்விக் கொடையாளர்’ ஆயி அம்மாள்  பள்ளி மாணவன் டேனியலுக்கு விருது   குடியரசு தின விழாவில் கெளரவித்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

75வது குடியரசு தினவிழாவையொட்டி, 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு விருதுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் 75வது குடியரசு தினவிழாவையொட்டி,  தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2024ஆம் ஆண்டிற்கான தமிழக விருதுகளை வழங்கினார்.

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் :

யாசர் அராபத்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த கனமழை தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக,  திருச்செந்தூர் பந்தல் கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. கிராம மக்கள் சுமார் 250 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து, அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும், அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டனர். தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி, யாசர் அராபத்துக்கு 2024- ஆம் ஆண்டிற்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

தே. டேனியல் செல்வகுமார்திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஆறுகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. அதிக நீர்வரத்தால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பத்தாவது வகுப்பு படிக்கும், திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவைச் சேர்ந்த டேனியல், தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் கொண்டு சென்று சேர்த்துள்ளார். இவர் தன்னலம் கருதாது, துணிச்சலோடு தன் உயிரையும் துச்சம் என நினைத்து இரண்டு நாட்கள் தன்னார்வ மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த நற்குணத்தை பாராட்டி, 2024 ஆம் ஆண்டிற்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

சிவக்குமார்திருநெல்வேலியில் பெய்த கன மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வரலாறு காணாத வகையில் தாமிரபரணி மற்றும் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொது மக்களை காப்பாற்றும் பணியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் ஈடுபட்டார். இரவென்றும் பாராமல், கிராமத்தின் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2400 பேரை மீட்டுள்ளார்.

கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்

முகமது ஜுபேர்கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி பஞ்சாயத்து உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வருகிறார் முகமது ஜுபேர் . " Alt News" என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சியின் உண்மை தன்மையை சரிபார்த்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தி பரப்பி வருவதை தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இன மற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாத வண்ணம் செயல்பட்டுள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

முதல்வரின் சிறப்பு விருது

ஆயி அம்மாள் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள யா.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆயி அம்மாள் எனப்படும் பூரணம் அம்மாள். கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த இவருடைய கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இரண்டு வருடத்திற்கு முன் இவரது மகளும் உயிரிழந்தார். தற்போது, தனியாக வாழ்ந்து வரும் ஆயி ஆம்மாள் அரசுப் பள்ளியை தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலைத்தை அரசுக்கு வழங்கினார். இவரின் இந்த மனதிற்காக, முதல்வரின் சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது

சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் இடத்தை மதுரை மாநகர காவல்நிலையம் பெற்றது. இரண்டாவது இடத்தை நாமக்கலும், மூன்றாம் இடத்தை பாளையங்கோட்டை காவல் நிலையமும் பெற்றன.

Tags :
Advertisement