கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கொடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையும் படியுங்கள்: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்தார்.
எதனடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்? என இ.பி எஸ்.க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோருகிறோம் என பதிலளித்தார்.
சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டுமென்ற இ.பி.எஸ். தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.