டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED... 14 மணிநேரம் நடந்த விசாரணை... நடந்தது என்ன?
திருவள்ளூர் அருகே 3 இளைஞர்களிடம் பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜா பேட்டை
கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், பிரகாஷ் மற்றும் அரவிந்த். இந்த 3 இளைஞர்களின்
வங்கி கணக்குகளில் திடீரென ரூ.3 கோடி டெபாசிட் ஆனது. இந்த பணம் அனைத்தும்
வடமாநிலத்தில் இருந்து வந்திருந்தது.
இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு தெரியவர, சந்தேகமடைந்த அதிகாரிகள் டெல்லியில் இருந்து திருவள்ளூருக்கு வந்தனர். 5 கார்களில், துப்பாக்கி ஏந்திய 10 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை 14 மணி நேரம் நீடித்ததால் இளைஞர்கள் 3 பேரையும் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு வரை இந்த விசாரணை நடைபெற்றது. இளைஞர்கள் தவிர, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் வங்கி அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இந்த விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் குறித்த தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.