ரம்ஜான் பண்டிகை எதிரொலி - களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!
ரம்ஜான் பண்டிகை, உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் பிறை தோன்றியதும், முக்கிய கடமையாகிய நோன்பு எடுத்து, ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து மாத இறுதியில் நோன்பு துறந்து பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அப்போது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களும், தங்கள் வழிபாட்டு ஸ்தலங்கள், மற்றும் பொது இடங்களில் திறந்த வெளியில் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பு தொழுகை செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் உலகம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆலங்குடி, கறம்பக்குடி, அன்னவாசல், திருமயம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தனர். மேலும் 15,000 முதல் 22,000 வரை ஆடுகள் விற்பனையானதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தையில் சுமார் 2.1/2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வார சந்தையில் கால்நடைகளின் விற்பனை அதிக அளவு நடைபெறும். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இதுவரை செஞ்சி வாரசந்தையில் 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை :
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டுச் சந்தைக்கு வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதில், வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஆடுகளை வாங்குவதற்காக நெல்லை,தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது. வள்ளியூர் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.