மழை எதிரொலி... வரத்துக் குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து அதிகளவிலான காய்கறிகள் வருகிறது.
கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை இன்று 50 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரங்களில் ரூபாய் 350 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காயின் விலை 400 விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பீன்ஸ் கடந்த வாரம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு 300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 380-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழையின் எதிரொலியாக முக்கியமான அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த காய்கறி விலை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
மழையின் தாக்கம் குறைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறி வரத்து அதிகரிக்கும். அப்பொழுது காய்கறி விலைகள் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றர்.