For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!

02:03 PM Dec 07, 2024 IST | Web Editor
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி   மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்
Advertisement

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேயிலை தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி உள்ளிட்ட மலை கிராமங்கள். சிங்கம்பட்டி ஜமீனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தினுடைய அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்காக பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் அங்கு தேயிலையை பயிரிட்டு, அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டது. பின் நாட்களில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட போதும் அரசுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து தேயிலை தோட்டங்களை நடத்தி வந்தது.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவெட்டி தேயிலை தோட்டம் மூடப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் இதர பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவர்கள் பணிபுரிய வழிவகைகள் செய்யப்பட்டது. நாளடைவில் 2000 தொழிலாளர்கள் 600 தொழிலாளர்களாக மாறினர். தேயிலை ஏற்றுமதியும் குறைந்தது. அதோடு தோட்டத்தின் ஒப்பந்த காலம் வருகின்ற 2028ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.

இதற்கு முன்னோட்டமாக கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உத்தரவும் பிறப்பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து குத்தகை காலம் முடியும் முன்பே பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கியது. இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என ஆறு பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த சில மாதமாக நடைபெற்று வந்த விசாரணை முடிவில், தொழிலாளர்களின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டது. “மாஞ்சோலை தொழிலாளர் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்களின் மறுவாழ்வை (Rehabilitation) உறுதி செய்யும் வகையில் அந்த நடவடிக்கைகள் உள்ளது. தொழிலாளர்களின் நல்வாழ்வை (Welfare) உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே மாஞ்சோலை தொடர்பான ஆறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவின் எதிரொலியாக, மாஞ்சோலையில் இருந்து தோட்ட தொழிலாளர்களை கீழே இறங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாற்றுத்தொழில் மற்றும் குடியிருப்பு வசதிகள் என அனைத்தும் ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என பல்வேறு துறை அதிகாரிகளும் மாஞ்சோலையில் முகாமிட்டுள்ளனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement