#ChennaiAirShow எதிரொலி | மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, நேற்று (அக்.6) ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று (அக்.6) நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மக்கள் அதிகமாக கூடியதால் மெரினா பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாதவகையில், நேற்று (அக்.6) ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரு நாளில் சராசரியாக 1.70 லட்சம் பயணம் மேற்கொள்வர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெரினாவில் விமானப்படை சாகசத்தை பார்த்துவிட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயும், கோயம்பேடு மெட்ரோவில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இடையேயும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பபட்டன.