போகி பண்டிகை எதிரொலி - சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். இதன் காரணமாக சென்னை மாநகர புறநகர் பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.
ஏற்கனவே பனிப்பொழிவு இருக்கும் நிலையில், தற்போது புகைமூட்டமும் சேர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். போகி பண்டிகையின்போது டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்ப போதிலும், அதனை கண்டு கொள்ளாமல் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மூன்று இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதன்படி, மணலியில் 132, பெருங்குடியில் 111, ராயபுரத்தில் 104 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 136, கடலூரில் 106, கும்மிடிப்பூண்டியில் 131, ராணிப்பேட்டையில் 130, வேலூரில் 127, விருதுநகரில் 111 என்ற மிதமான அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.