தொடர் விடுமுறை எதிரொலி - விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !
தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்துள்ளனர். இதையடுத்து கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டதை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ரூ.100 கட்டன தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் காத்திருந்தனர். கிரி பிரகாரங்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுவதால் திருச்செந்தூர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர், கழிப்பறை, பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமுக் கூடுதலாக செய்துகொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.