பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!
பிலிப்பைன்சின் மேகடாசனில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு பிலிப்பைன்சின் மலைப் பகுதியில் மழை காரணமாக பிப்.06-ம் தேதி இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மின்டானோ தீவில் உள்ள ஒரு சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்தன. மேலும் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருந்த இரண்டு மாத குழந்தை ஒன்றையும், 3 வயது பெண் குழந்தையையும் உயிருடன் மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிலிப்பைன்சின் மேகடாசனில் இருந்து 2 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.