பிலிப்பைன்சில் நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் செபு மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது, லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் 10.4 கி.மீ., ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், செபு மாகாணத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங்களில் வீடுகள், இரவு விடுதிகள் இடிந்து விழுந்தன. சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களை தேடி அலைந்தனர். இதில், கடலோர நகரமான போகோ கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் நுாற்றுக்கணக்கானவர்கள் சிக்கிய நிலையில், 69 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக அங்கு ஏராளமான தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போய்யுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.