ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - உலக நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்!
ரஷ்யாவில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் சுனாமி அலைகளின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தென் அமெரிக்க நாடான பெருவின் கடற்கரைப் பகுதிகளிலும் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்பதால், அங்குள்ள மக்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.பெருவைப் போலவே, ஈக்வடார் கடலோரப் பகுதிகளிலும் சுனாமி அச்சுறுத்தல் உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரசென்ட் சிட்டி
மேலும் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி மற்றும் யுரேகா ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவசரகால சேவை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.அதே சமயத்தில், அரசால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும், அவசரகால சேவை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடற்கரையோரப் பகுதிகள், ஆறுகள் மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் இருந்து உடனடியாக பாதுகாப்பான, உயரமான இடங்களுக்குச் செல்லவும்.மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.